
புதுடில்லி : நாட்டின் 73 வத சுதந்திர தினத்தை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினார்.தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றி பிரதமர் மோடி, டில்லி செங்கோட்டையில் தொடர்ந்து 6 வது முறையாக தேசியக் கொடி ஏற்றும் காங்., அல்லாத 2 வது பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் பா.ஜ.,வை சேர்ந்த வாஜ்பாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளார். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்த அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்கு எனது வணக்கங்கள். இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். புதிய அரசு பதவியேற்று மீண்டும் தேசியக் கொடி ஏற்று வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் தங்களின் வாழ்வை தியாகம் செய்தனர். பலர் தங்களின் இளமை காலத்தை சிறையில் கழித்துள்ளனர். விடுதலைக்காக போராடியவர்களுக்கு எனது வணக்கங்கள். முஸ்லீம் தாய்மார்கள், சகோதரிகளின் உரிமைகளுக்காக முத்தலாக் முறை நீக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு 90,000 கோடி நிதியுதுவி அளிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என விவசாயிகள் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். 60 வயதிற்கு பிறகு கவுரவமாக வாழ இது உதவிகரமாக இருக்கும். வெள்ள துயரை துடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டிற்கு புதிய சட்டங்கள், புதியசிந்தனை தேவை. குழந்தைகள் நலனுக்காகவும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.அனைத்து பிரிவினருக்காகவும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தொடர் செய்வோம். மக்கள் சேவை ஆற்றி கிடைத்த வாய்ப்பை ஒரு இழையை கூட வீணடிக்காமல் நிறைவேற்றுவோம்.
நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தோம். 2014 தேர்தலுக்கு பிறகு மக்கள் எதிர்பார்த்ததை விட அதிக மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் வல்லபாய் பட்டேலின் கனவு நினைவாகி உள்ளது. மோடிக்கு வேண்டியவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.
மக்கள் தான் போட்டியிட்டார்கள். 130 கோடி இந்தியர்கள் தங்களின் கனவை நிறைவேற்றுவதற்காக எனக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளனர். இஸ்லாமிய நாடுகளில் ஏற்கனவே முத்தலாக் தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவில் முத்தலாக் தடை கொண்டு வர தாமதம் ஏன் என புரியவில்லை.
பால்ய விவாகத்தை தடை செய்த நம்மால் முத்தலாக்கையம் தடை செய்ய முடியும். எங்கள் அரசு அமைந்து 10 வாரங்களில் 370, 35 ஏ நீக்கப்பட்டது. பிரச்னைகளை இனி வளர்க்கவும் கூடாது. வளர விடவும் கூடாது.இவ்வாறு தெரிவித்தார்.