‘நிவர்’ புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்

0
23

வங்க கடலில் உருவாகியுள்ள, ‘நிவர்’ புயலால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது.

வங்க கடலில் உருவாகியுள்ள, ‘நிவர்’ புயல், சென்னை அருகே இன்று(நவ.,25) கரையை கடக்க உள்ளது. புயலில் நகர்வு காரணமாக, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை துவங்கியது. நேற்று அதிகாலை முதல், பகல் முழுதும், மழை வெளுத்து வாங்கியது. இதனால், சென்னை மற்றும் புறநகரில், அண்ணாசாலை, 100 அடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம் தேங்கி, போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கடல் சீற்றம்:

நேற்று முன்தினம், எண்ணுார், திருவொற்றியூர் கடற்கரைகளில், படகுகள் பத்திரமாக பாறைகளில் கட்டி வைக்கும் பணியை, மீனவர்கள் மேற்கொண்டனர். தவிர, காசிமேடு மீன்பிடித் துறைமுகம், வார்ப்பு பகுதிகளில், விசைப்படகுகள் பத்திரப்படுத்தப்பட்டன. நேற்று அதிகாலை, புயல் காரணமாக, காசிமேடு, எண்ணுார், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில், கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது.

ஆக்ரோஷமாக உயரே எழும்பிய அலைகள், பயங்கர சத்தத்துடன், துாண்டில் வளைவுகளில் மோதின. சீற்றம் காரணமாக, காசிமேடு மீன்பிடித் துறைமுகம் வார்ப்பு பகுதிகளில் கட்டப்பட்டிருந்த சிறிய படகுகள், ராட்சத கிரேன் மூலம், அருகேயுள்ள மைதானத்திற்கு இடமாற்றம் செய்யும் பணி, நேற்று விறுவிறுப்பாக நடந்தது. எண்ணுார், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில், ஆபத்தான நிலையில், துாண்டில் வளைவுகள், பாறைகளில் நின்று, கடல் சீற்றத்துடன், ‘செல்பி’ எடுக்க, பலரும் கூடினர். அவர்களை போலீசார் கவனித்து விரட்டினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here