நேரம் குறிப்பிட்டு மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

0
45

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து வெண்ணங்குழி, அய்யப்பன் நாயகன்பேட்டை, வங்குடி, சொக்கலிங்கபுரம், மீன்சுருட்டி, இளையபெருமாள் நல்லூர், வீரபோகம், ஆலத்திபள்ளம், சத்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பகலில் மும்முனை மின்சாரம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், அடுத்த வாரத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

இதேபோல் இரவில் 12 மணி முதல் காலை 6 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பகலில் வழங்கப்படும் மும்முனை மின்சாரம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை வழங்காமல், எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரையும் அல்லது காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்குவதால், விவசாயிகளும் மற்றும் அரவை மில்கள் நடத்தி வரும் வணிகர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

காத்துக்கிடக்கும் நிலை:

பகல் நேரங்களில் மும்முனை மின்சாரம் எப்போது வழங்கப்படுகிறது என்பதே தெரியாமல் பொதுமக்கள் காலையில் இருந்தே அரவை மில்களில் காத்துக்கிடக்கின்றனர். காலை அல்லது மதியம் குறிப்பிட்ட நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். வாரம் ஒரு முறை காலையில் அல்லது மதியம் மும்முனை மின்சாரத்தை நேரம் குறிப்பிட்டு வழங்கினால் விவசாயிகளுக்கும், அரவை மில் வைத்திருப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும். எனவே அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், பாப்பாக்குடி துணை மின் நிலையத்தை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்களை தெரிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here