
கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு அரசு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
அனல்மின், புனல்மின், சாலைகள், அணுமின், பெரிய கட்டுமானங்கள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-ன் கீழ்தான் பெற முடியும். இந்த அறிவிக்கையில் பல்வேறு மாறுதல்கள் செய்து அதன் வரைவினை பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக மத்திய அரசு வெளியிட்டிருந்தது.
அதற்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி முடிவடைந்த நிலையில், அதுதொடர்பாக வழக்கு ஒன்றில் உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வரைவு அறிவிக்கை இந்தியா முழுவதும் வசிக்கின்ற அனைத்து மக்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிற சட்டம் என்பதால் 22 மொழிகளில் அறிவிக்கையை மொழி பெயர்த்து 10 நாட்களுக்குள் மத்திய சுற்றுச்சூழல் துறை வெளியிட வேண்டும் என்றும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை பொதுமக்கள் கருத்துக் கேட்க நேரம் வழங்க வேண்டும் என்று ஜூன் 30ம் தேதியே உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தற்போது 26 நாட்கள் கடந்தும் கூட மத்திய அரசு மொழிபெயர்க்கப்பட்ட அறிவிக்கையினை வெளியிடவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்த வரைவு அறிவிக்கைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பையும் கிளப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை 2019ம் ஆண்டு ஜூன் மாதமே தெரிவித்துள்ளது. இந்த வரைவு அறிவிக்கை பொதுமக்கள் கருத்துக் கேட்பிற்காக வெளியிடப்படும் முன்பே மாநில அரசுகளின் கருத்தைப் பெறுவதற்காக அனுப்பப்பட்டிருந்தது. அப்போது மத்திய அரசிற்கு தமிழக அரசு தனது நிலைப்பட்டினை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குநர் வாயிலாகத் தெரிவித்திருந்தது.
அதில் குறிப்பாக 50,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மிகாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களித்தால் கழிவு நீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை செய்வதில் பிரச்னை எழும்.
25 ஹெக்டேர் பரப்பளவிற்கு மிகாமல் அமைக்கப்படும் கனிம சுரங்கங்களுக்கு பொது மக்கள் கருத்துக் கேட்பில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்று கூறப்பட்டிருப்பது ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றம் 5 ஹெக்டேர் பரப்பளவிற்கு அதிகமாக கனிம சுரங்கம் அமைக்க பொது மக்கள் கருத்துக் கேட்பு அவசியம் என்று அளித்த உத்தரவிற்கு எதிராக உள்ளது.தேசியப் பூங்காக்கள், சரணாலயங்களிலிருந்து 1 கிமீ எல்லைக்குள் சுரங்கள் அமைக்கக் கூடாது என்று டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவுப்படி இந்த புதிய வரைவு அறிக்கையில் குறிப்பிடவில்லை என்றும் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றுகிறதா என்று கண்காணிக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையங்கள் குழுவை அமைக்க அதிகாரம் வேண்டும் ஆகிய கருத்துகளை மத்திய அரசிற்கு தெரிவித்திருந்தது. இந்தக் கடிதத்தில் தற்போது பல்வேறு திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு அரசு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.