
சென்னை: நடிகர் ரஜினி காந்த் அரசியல் கட்சி தொடங்கினால் பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்று நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி காந்த் அரசியல் கட்சி வரும் தை மாதம் தொடங்கப்போவதாக கூறப்படுகிறது. வரும் சட்டசபை தேர்தலை குறிவைத்து அவர் களம் இறங்குவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றை இப்போது பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கராத்தே தியாகராஜன் இவர் தான் ரஜினி கட்சி எப்போது ஆரம்பிப்பார் என்பது குறித்தும் ரஜினியின் அரசியல் வருகைக்கு மிகப்பெரிய ஆதரவும் கொடுத்துவருகிறார். இவர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கூறுகையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன் நிச்சயம் கட்சி தொடங்கி விடுவேன் என்று ரஜினி தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின், கோட்டையில் ரஜினிகாந்தின் கொடி தான் பறக்கும் என்றார்.
கொண்டாடப்படும் நடிகர்
தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் அரசியலுக்கு வந்த பிறகு அது தொடர்பான கருத்து தெரிவிக்கிறேன் என்றார்.
ரஜினி தான் முடிவு செய்யணும்
ரஜினியின் அரசியல் வருகை வரவேற்கத்தக்கது, பாஜகவில் ரஜினி இணைவது பற்றி, பாஜக மற்றும் ரஜினி தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
கட்சிகள் காணாமல் போகும்
இதனிடயே நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்வி சேகர், பாஜகவில் ரஜினி இணைவதற்கு வாய்ப்பு மிகக்குறைவு என்றும் ஆனால் பாஜக மற்றும் ரஜினியின் கொள்கைகள் ஒரே மாதிரியானவை என்றும் கூறினார். மேலும் ரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்றார்.
யாருக்கு பாதிப்பு
திருச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளிக்கையில், ரஜினி சிறந்த நடிகர், நல்ல மனிதர், மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசக் கூடியவர். ரஜினி கட்சி ஆரம்பித்தால் யாருக்கு பாதிப்பு என்று சொல்ல முடியாது, முதலில் அவர் கட்சியை ஆரம்பிக்கட்டும் என்றார்