Thursday, April 24, 2025
முகப்பு மாவட்டம்அரியலூர்விநாயகர் சதுர்த்தி - 2023

விநாயகர் சதுர்த்தி – 2023

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு :

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர்:

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் (கடல், ஆறு மற்றும் குளம்) கரைக்கப்படும். இந்தநிலையில், அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின் படி, மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அந்தவகையில் களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

பிளாஸ்டிக் அனுமதி இல்லை

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்தநீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சுகலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு

சிலைகளை அழகுப்படுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

அரியலூர் பகுதி விநாயகர் சிலைகள் மருதையாற்றிலும், திருமானூர் பகுதி விநாயகர் சிலைகள் கொள்ளிடம் ஆற்றிலும், ஜெயங்கொண்டம் பகுதி விநாயகர் சிலைகள் அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றிலும் கரைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments