அரியலூர்: இன்று நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் அரியலூர் வந்த வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு அளிப்பதில் பாஜகவினருக்கும், விசிகவினருக்கும் இடையே ஏற்பட்ட சலசலப்பால் ரயில் நிலையத்தில் சிறது நேரம் பதற்றம் நீடித்தது.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவை வழங்குவதில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்திய ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இந்நிலையில் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த ரயில்கள் முக்கிய நகரங்களை இணைக்கும். அதேபோல அதிவேகம் மற்றும் நவீன வசதிகளை கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. முதன் முதலாக டெல்லியிலிருந்து 759 கி.மீ தொலைவில் உள்ள உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கு இயக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்த மாநிலங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டன. எடை குறைவான இந்த ரயில்கள் கவாச் ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டதால் அதன் மீதான வரவேற்பும் அதிகமாக இருந்தது. இந்த ரயில்கள் அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் இயங்கும். இந்த ரயில் சில குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்லும். இந்த ரயில் சேவையை நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களில் தொடங்கி வைத்து வருகிறார். தென் மாநிலங்களை பொறுத்த அளவில் சென்னை-மைசூர், சென்னை-மதுரை, சென்னை-கோவை மற்றும் திருவனந்தபுரம்-காசர்கோடு வழித்தடங்களில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில் சேவை கன்னியாகுமரி வரை நீடிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நெல்லையிலிருந்து புறப்பட்ட ரயில் மதுரை வந்து சேர்ந்தபோது அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் சிபிஐஎம் எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் ரயிலுக்கு வரவேற்பளித்தனர்.
அதேபோல இரவு 7.30 மணியளவில் வந்தே பாரத் ரயில் அரியலூர் வந்து சேர்ந்தது. இந்த ரயிலை வழியனுப்பி, அதே ரயிலில் பயணிக்க சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரும், விசிக தலைவருமான திருமாவளவன் காத்திருந்தார். இப்படி இருக்கையில், அங்கு கூடியிருந்த விசிகவினருக்கும், பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், உடனடியாக இரு தரப்பினரையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்கையில் விசிக தலைவர் திருமாவளவன் காதருகே சென்று ‘பாரத் மாதாகி ஜே’ என பாஜகவினர் சிலர் கூச்சலிட்டதால்தான் பிரச்சனை எழுந்ததாக விசிக தரப்பில் சொல்லப்படுகிறது. அதேசமயம் பாஜக தரப்பில் விசாரிக்கும்போது, “விசிகவினர் ‘ஜெய் பீம்’ என கோஷமிட்டனர். எனவேதான் நாங்கள் பாரத் மாதா கி ஜே கோஷமிட்டோம்” என்று பாஜகவினர் கூறுகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அரியலூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.