‘எப்படி தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து மக்களை குடிக்கத் தூண்டுகிறார்களோ, அதுபோல தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மக்கள் தூண்டப்படுகிறார்கள்.எனவே அந்நிகழ்ச்சிக்கு உடனே தடை விதிக்கவேண்டும்’என்று 50 நாட்களைத் தாண்டியது கூட தெரியாமல் தடை கேட்கிறார் பிரபல அரசியல்வாதியாகத் துடிக்கும் ராஜேஸ்வரி பிரியா.
அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் மாநில தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி இளைஞர்களையும், சிறுவர்களையும், சமுதாய கலாச்சாரத்தையும் சீரழிப்பதாகவும், அதனால், இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சி வேண்டாம் என்று முழக்கமிட்டனர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய ராஜேஷ்வரி பிரியா, “பிக் பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ என்றால் அதற்கான கட்டுப்பாடுகளுடன் நடக்க வேண்டும். ஆனால், அந்த நிகழ்ச்சி அப்படி நடக்கவில்லை. அதில் காதல், கசமுசா, ஆபாசமாக உடை அணிவது போன்றவற்றை காட்டுகிறார்கள். அதே போட்டி முடிந்த பிறகு வெளியே வரும் போட்டியாளர்கள், அதை சாதாரணமாக அவர் அவர் வேலையை பார்க்கிறார்கள். ஆனால், நிகழ்ச்சியை பார்க்கும் இளைஞர்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். நிகழ்ச்சியை பார்ப்பது, பார்க்காமல் இருப்பது அவர் அவர் விருப்பம், என்று கூறுவது சரியல்ல. அப்படியானால் பஸ் டாண்டுகளில் ஏன், பிக் பாஸ் நிகழ்ச்சியை விளம்பரம் செய்கிறார்கள். நடிகை, நடிகர்களை போட்டு நிகழ்ச்சியை நடத்துவது ஏன். நிகழ்ச்சியை பார்க்க மக்களை தூண்டுகிறார்கள்.
நடிகர் கமல்ஹாசனை ஒப்பந்தம் செய்து, அவர் மூலம் மக்களிடம் நிகழ்ச்சியை கொண்டு சேர்ப்பது ஏன்? எப்படி தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து மக்களை குடிக்க தூண்டுகிறார்களோ, அதுபோல தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மக்கள் தூண்டப்படுகிறார்கள். அதை நிறுத்த வேண்டும்.கடந்த இரண்டு வருடமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று தெரிவித்து வந்தேன். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசனை சந்தித்து கூறினேன். தணிக்கைக் குழு இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதை கண்டிக்கிறோம்.எனவே, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை குழு மூலம் ஒப்புதல் பெறப்பட்டு அதன் பிறகே அந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என்று கூறினார்.என்று தெரிவித்தார்.