இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்நாட்டின் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் திரு சிதம்பரத்தின் புதுடெல்லி வீட்டுக்கு நேற்றிரவு சென்று அவரை மத்திய புலனாய்வுத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். புலனாய்வுத் துறையின் பேச்சாளர் அபிஷேக் தயால் இந்தத் தகவலை உறுதி செய்தார்.

‘ஐஎன்எக்ஸ் மீடியா’ நிறுவனம் வழியாக வெளிநாடுகளிலிருந்து பெருமளவிலான நிதித்தொகையை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்குத் திரு சிதம்பரம் அவரது மகன் திரு கார்த்திக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார். அந்த முறைகேடு வழக்கில் திரு சிதம்பரம் முன்பிணை கோரி நேற்று முன்தினம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அவரது கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இதையடுத்து, முன்னாள் சட்ட அமைச்சர் கபில் சிபல் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

“ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயும் அமலாக்கத் துறையும் விசாரணைக்கு அழைத்தபோது எல்லாம் நான் முன்னிலையாகி இருக்கிறேன். அப்படி இருக்க, சட்டத்திடம் இருந்து தப்பி, ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை,” என்று திரு சிதம்பரம், தமது மேல்முறையீட்டு மனுவில் கூறியிருக்கிறார்.

அம்மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதி ரமணா, அதைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் பார்வைக்கு அனுப்புவதாகத் தெரிவித்தார். ஆனால், திரு கோகோய் தலைமையிலான அமர்வு, அயோத்தி வழக்குத் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டிருந்ததால் திரு சிதம்பரத்தின் மனு மீண்டும் நீதிபதி ரமணா தலைமையிலான அமர்விடமே வந்தது.

தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று கூறிவரும் திரு சிதம்பரம், இந்தியாவின் பாஜக அரசு தன் மீது பழிதீர்க்க முயல்வதாகத் தெரிவித்தது.