மதுரை: மதுரைப் பக்கம் மட்டும் போய்ராதீங்கடா.. படுக்கப் போட்டு அரிவாள்ளேயே வெட்டுவானுகன்னு ஒரு படத்துல வசனம் வரும்… ஆனா அதில் ஒரு பர்சன்ட் கூட நிஜம் கிடையாது.. பூராம் பாசக் கார பயலுக.. !

இப்பக் கூட பாருங்களேன்.. உதயநிதி ஸ்டாலினின் மதுரை வருகையை கிண்டலடிச்சு ஊர் பூராம் போஸ்டர் ஒட்டிருக்காங்க. ஆனால் படக்கென்று பார்த்ததும் அது நக்கல்னு தெரியாது. கிட்டப் போய் உத்துப் பார்த்தாதான் ஆஹா.. இது பெரிய லந்தா இருக்கேன்னு நமக்கே தோணும். அப்படி ஒரு ஜாலி போஸ்டர் அது.

இளைஞர் அணிக்கான நேர்காணல் நடத்த உதயநிதி ஸ்டாலின் மதுரை போயுள்ளார். இதையடுத்து அவரது பெரியப்பா மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஒரு குசும்பு போஸ்டரை ஊர் முழுக்க ஒட்டியுள்ளனர். அதில், உங்கள் பெரியப்பா மு.க.அழகிரியின் கோட்டைக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே வருகே வருக என வரவேற்கிறோம் என ஒட்டியுள்ளனர்.

போஸ்டரில் 42வது வட்ட திமுக என்று போடப்பட்டுள்ளது. பல்வேறு நிர்வாகிகள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இவர்கள் திமுகவில் உள்ளவர்களா அல்லது அழகிரி ஆதரவாளர்களா என எதுவும் தெரியவில்லை. ஆனால் போஸ்டர் செம கலகலப்பாக இருக்கிறது.

மதுரைக்காரங்க நக்கலுக்கு லிமிட்டே இல்லாம போயிட்டிருக்குய்யா.. அடங்க மாட்டேங்குறாய்ங்களே!