திருச்சி: தூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகரை, எழுப்பி கூட்டி வந்து, கழுத்திலேயே கத்தியால் குத்தி கொன்றுவிட்டார் சக நண்பன். இதனால் லால்குடி பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
திருச்சி மாவட்டம் லால்குடி சின்னசெட்டி தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. 20 வயதான இவர் ஒரு தீவிரமான ரஜினி ரசிகர். பிளஸ்-2 வரை படித்து விட்டு வேலைக்கு சென்று வந்தார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து அந்த பகுதியில் விநாயகர் சிலையை வைத்துள்ளனர் பார்த்தசாரதி, மற்றும் அவரது நண்பர் தினேஷ்குமார் என்பவர்.
தினேஷ்குமார்:
நேற்று விநாயகர் சிலைக்கு பூஜை செய்யப்பட்டு, பொதுமக்களும் தரிசித்து சென்றனர். பிறகு நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தசாரதி தண்ணி அடித்துள்ளார். அப்போதுதான், பணம் வசூல் செய்ததில் தினேஷ்குமார் ஏமாற்றிவிட்டதாக தெரிந்துள்ளது. இதைப்பற்றி தினேஷ்குமாரிடம் பார்த்தசாரதி கேட்க போய் அது கைகலப்பாக மாறியது.
தூக்க கலக்கம் :
இந்தநிலையில் நள்ளிரவு 1 மணிக்கு, தினேஷ்குமாரிடம் பணம் கையால் பண்ணிட்டியாமே என்று கேட்டுள்ளார். “இதை உனக்கு யார் சொன்னது” என்று கேட்டதற்கு, “பார்த்தசாரதி தான் சொன்னான்” என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், நேராக பார்த்தசாரதி வீட்டுக்கு போய், தூங்கி கொண்டிருந்தவரை எழுப்பி கற்பக விநாயகர் கோவில் பகுதிக்கு அழைத்து வந்து விளக்கம் கேட்டார்.
சண்டை:
அப்போது திரும்பவும் இருவருக்கும் சண்டை ஆரம்பமானது. வாக்குவாதம் முற்றிய நிலையில், தினேஷ்குமார், இடுப்பில் செருகி இருந்த கத்தியை எடுத்து பார்த்தசாரதி கழுத்தில் குத்தினார். தடுக்க வந்த கார்த்திகேயனையும் குத்தினார். இதில் கழுத்தில் கத்திகுத்து விழுந்ததால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி பார்த்தசாரதி உயிருக்கு போராடினார்.
கைது :
பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பதற்குள் உயிர் பிரிந்தது. இது தொடர்பாக லால்குடி போலீசார் தினேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதுடன், அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.