தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் விளங்கும் கலைப்புலி எஸ்.தாணு,‘வி’ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘அசுரன்’. வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான நான்காவது படமிது.

சமீபத்தில் சென்னையில் நடந்த அசுரன் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், வெற்றி மாறன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட படக்குழுவினர் அசுரன் படம் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். படம் குறித்த அவர்களது முக்கியமான கருத்துக்கள் இதோ:

மஞ்சு வாரியர்

இயக்குநர் வெற்றி மாறனின் படங்களுக்காக எல்லோருமே காத்திருப்பார்கள். குறைந்த படங்களே செய்திருந்தாலும், அவர் இயக்கிய ஒவ்வொரு படத்திலும் அவரது முத்திரை இருக்கும். வெற்றி மாறனுக்கு கேரளாவிலும் பெரிய ‘ஃபேன் பேஸ்’ இருக்கிறது. குறிப்பாக, மலையாளத் திரைத்துறையில் அவரது படத்திற்காக எப்போதும் ஆர்வமாக காத்திருப்பார்கள்.

கென்

தயாரிப்பாளர் தாணு சார், படப்பிடிப்புத் தளத்திற்கு எப்போது வந்தாலும் உற்சாகப்படுத்துவார். அப்புறம் எனக்கு அப்பா, ஃபிரண்டு எல்லாமே ஒருவர் தான். அவர் தான் தனுஷ் சார். அவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் கொஞ்சம் கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு நண்பன் போலத் தான் பழகுவார் தனுஷ். படப்பிடிப்பில் அவருடன் நடிக்கும் எனக்கு கஷ்டமே தெரியவில்லை. இந்தப் படத்தின் மூலமாக அவரிடம் நான் நிறையக் கற்றுக் கொண்டேன்.

ஜி.வி.பிரகாஷ் குமார்

முக்கியமான கலைஞர்கள் நடித்துள்ள நல்ல படமிது. படத்தில் முழுக்க மண் சார்ந்த இசையையும் கிராமிய இசையையும் தான் பயன்படுத்தி இருக்கிறோம். அசுரன் உங்களை நிச்சயம் ஈர்க்கும்.

வேல்ராஜ்

இந்த வருஷம் எல்லோருமே தமிழ் நாட்டுக்கு விருது கிடைக்கலைன்னு வருத்தப்பட்டாங்க. கண்டிப்பாக அசுரன் அடுத்த வருட தேசிய விருதை அள்ளிக்கொண்டு தான் வரும். அசுரன் படப்பிடிப்பை தேரிக்காடு எனும் இடத்தில் நடத்தினோம். 8 நாட்களுக்கு மேல் அங்கு சண்டைக் காட்சிகளை படமாக்கினோம். எல்லோருடைய ‘ஷூ’ அடிபாகமே கழண்டு விழும் அளவிற்கு வெய்யில் அங்கிருந்தது. அந்த இடத்தில் தனுஷ் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தார் என நம்மால் புரிந்து கொள்ளக்கூட முடியாது.

தனுஷ்

வடசென்னை பார்க்கும் போது இதைத் தாண்டி வெற்றி மாறன் என்ன கொடுத்து விடப் போகிறார், இது தான் அவருடைய ‘பெஸ்ட்’ என்று எனக்குத் தோன்றியது. அப்போது, என்னுடைய கணிப்பு அப்படித்தான் இருந்தது.

ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே நிறைய விஷயங்கள் நமக்கு புரியும். அப்படிப் பார்த்ததில், அசுரன் தான் வெற்றி மாறனின் ‘பெஸ்ட்’.

வெற்றி மாறன்

‘ஒரு சினிமா தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும்’ என நான் நம்புகிறேன். நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒன்றை நிகழ்த்த முடியாது. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொள்ளும். இந்தப் படத்தின் குழுவும் அவ்வாறு தான் அமைந்தது.

சிவசாமி எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் அசுரனில் நடித்திருக்கிறார். தனுஷ் எந்த படத்தில் நடித்தாலும் அர்ப்பணிப்புணர்வோடு தான் செய்வார். அசுரன் படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மிகப்பெரியது. உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்வு ரீதியாக அவ்வளவு ஆழமான தருணங்கள் இந்தப்படத்தில் இருக்கின்றன. இந்தப் படம், இந்த உலகம், எல்லோரிடமும் இருந்து எடுத்துக்கொண்ட அர்ப்பணிப்பு மிகப்பெரியது, ரொம்ப அதிகமானது.

கலைப்புலி எஸ்.தாணு

தனுஷ் தான் வெற்றி மாறன் பெயரை சொல்லி இவருடன் படம் செய்ய வேண்டும் எனக் கூறினார். நான் அதனை உடனடியாக அங்கீகாரம் செய்தேன். வெற்றி மாறன் ஒரு வியக்கத்தகுந்த மனிதனாக இருக்கிறார். நான் பாரதிராஜாவிடம் கூறுவேன், ‘நீ கர்வம், கோபக்காரன்..வெற்றி மாறன் ஒரு தென்றல் மாதிரி’ என அவரிடம் கூறுவேன். ஆனால், வெற்றி மாறன் படப்பிடிப்பு சமயத்தில் நடந்ததைக் கூறுவதைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.

ஒரு செங்குத்தான மலை மீது எடுக்கப்பட்ட காட்சியை காட்டினார்கள். இந்த மலை மீது தனுஷ் எப்படி ஏறியிருப்பார் என வியப்படைந்தேன். கேமரா அதற்கு மேல் உள்ள உயரமான மலையிலிருந்து இந்தக் காட்சியை படமாக்கியது. உயிரை பணயம் வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். உதிரம் கொட்டியிருக்கிறார்கள்.

இவ்வாறு அசுரன் குறித்த தங்கள் அனுபவங்களை படக்குழுவினர் பகிர்ந்தனர்.

அசுரனில் மஞ்சு வாரியர், அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கென், ‘ஆடுகளம்’ நரேன், டி.ஜே, பவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கரிசல் வட்டாரப் பின்னணியில் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது அசுரன். காத்திரமான ஒரு நாவலை வெற்றி மாறன் போன்ற தீவிரமான கலைஞனின் கைவண்ணத்தில், தனுஷின் நடிப்பில் காண ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது.

அசுரனின் வேட்டை இன்று முதல்!