ஹைதராபாத்: தெலுங்கானா சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் 48000 பேரை ஒரே நாளில் பணியில் இருந்து நீக்கி அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தெலுங்கானா சாலை போக்குவரத்து கழகம் சார்பாக தற்போது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயுத பூஜை மற்றும் தசராவை முன்னிட்டு நாடு முழுவதும் பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.
இதனால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகமான எண்ணிக்கையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதற்கு மத்தியில்தான் தற்போது தெலுங்கானா சாலை போக்குவரத்து கழகம் சார்பாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
என்ன கோரிக்கை
சம்பள உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும், ஓய்வு ஊதியத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய போராட்டம் தற்போது வரை தொடர்கிறது.
கேட்கவில்லை
இந்த போராட்டத்தை நேற்று மாலைக்குள் கைவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்து இருந்தார். ஆனால் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. தெலுங்கானா போக்குவரத்து கழகம் ஏற்கனவே 1100 கோடி ரூபாய் நஷ்டத்தில் சென்றது. இதனால் தற்போது இழப்பு 5000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
என்ன உயர்வு
ஆகவே உடனடியாக போராட்டத்தை கைவிடும்படி சந்திரசேகர ராவ் கோரிக்கை வைத்தார். அதே சமயம் அவர் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் உறுதியாக கூறிவிட்டார். இதனால் தற்போது போராட்டத்தை கைவிடாமல் ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
என்ன நீக்கம்
இதையடுத்து கோபம் அடைந்த சந்திரசேகர ராவ், தெலுங்கானா போக்குவரத்து கழக ஊழியர்கள் 48000 பேரை ஒரே கையெழுத்தில் வேலையைவிட்டு நீக்கி உள்ளார். நீங்கள் செய்தது பெரிய குற்றம். இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். விழா காலத்தில் நீங்கள் இப்படி செய்ததை மன்னிக்க முடியாது என்று கூறி சந்திரசேகர ராவ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
மிக மோசம்
ஓட்டுனர்கள், நடத்துனர்கள், அலுவலக பணியாளர்கள் என்று பலர் இதனால் வேலையை இழந்து இருக்கிறார்கள். இதனால் தெலுங்கானாவில் தற்போது ஊழியர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதே சமயம் இது தொடர்பான வழக்கை ஹைதராபாத் ஹைகோர்ட் வரும் 10ம் தேதி விசாரிக்கிறது.
பெரிய சர்ச்சை
தற்போது மாற்று ஆட்களை, தற்காலிக ஊழியர்களை வைத்து இந்த பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. இதனால் டிக்கெட் வசூலில் நிறைய விதமான முறைகேடுகள் நடக்கிறது என்று புகார் எழுந்துள்ளது. சில இடங்களில் விபத்தும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நீக்கப்பட்ட பணியாளர்களுக்கு பதிலாக வேகமாக புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவோம் என்று சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.