திருவனந்தபுரம்: மாநில தலைநகரங்களில் சபரிமலை கட்டுப்பாட்டு அறை திறக்க வேண்டும் என, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

சபரிமலையில், மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக, அண்டை மாநில அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம், திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆந்திரா கூட்டுறவு, சுற்றுலா மற்றும் தேவசம்போர்டு அமைச்சர் வேலம்பள்ளி ஸ்ரீனிவாசராவ், புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், கேரளா தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் மற்றும் அரசு செயலர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாஸ்டர் பிளான்:

கூட்டத்தை ஆரம்பித்து வைத்து, முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: சபரிமலையில், பக்தர்கள் தேவைகளை உணர்ந்து, அரசு உரிய வசதிகளை செய்து கொடுக்கிறது. மண்டல, மகரவிளக்கு சீசனில் வரும் பக்தர்களில், 75 சதவீதம் பேர், தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களை சேர்நதவர்கள். இவர்களுக்காக, கடந்த சில மாதங்களாக பல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சபரிமலை, ‘மாஸ்டர் பிளானு’க்காக ஆண்டு தோறும், பட்ஜெட்டிலிருந்து, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு காரணமாக வனவிலங்குகள் இறந்துள்ளன. இதனால், பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இருமுடியில், பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டுள்ளதால், சன்னிதானம், பம்பை மட்டுமல்லாமல், நிலக்கல், எருமேலி, பிலாப்பள்ளி போன்ற இடங்களிலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டு உள்ளது; தேவையான மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

முன்பதிவு இலவசம்:

எருமேலி – அழுதை 21 கி.மீ. துாரம் ஆகும். மதியத்துக்கு பின், எருமேலியில் இருந்து பயணம் துவங்குபவர்கள் அழுதையை கடக்க முடியாது என்பதால், மாலை, 3:-00 மணிக்கு பின், அங்கிருந்து பக்தர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை. விரைவு தரிசன முன்பதிவு, வெளிமாநில பக்தர்களுக்கு பெரிதும் உதவும். இந்த முன்பதிவு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சீசனில், அண்டை மாநில தலைநகரங்களிலும், சபரிமலை கட்டுப்பாட்டு அறை திறக்க வேண்டும். இதன் மூலம் பக்தர்கள், தங்களுக்கு தேவையான விபரங்களை பெற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழக பக்தர்களின் வசதிக்காக ஐந்து ஏக்கர் நிலம்:

வசதிகள் செய்து தருவதற்காக, நிலக்கல்லில், நான்கு மாநில பக்தர்களுக்கு, 5 ஏக்கர் நிலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது பற்றி, தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசின் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். நிலக்கல்லில் தரும் நிலத்துக்கு பதிலாக, பழநியில் 5 ஏக்கர் தருவதாக தமிழக அரசு ஒப்புக் கொண்டதை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சுட்டிக்காட்டினார். ஆனால், இதுபற்றி, எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.