68 வினாடிகளில் ரூ. 85,000 கோடிக்கு ஆன்லைன் விற்பனையில் அலிபாபா சாதனை!!
ஷாங்காய்: அலிபாபா நிறுவனம் கடந்தாண்டு இதே கால கட்டத்தில், 68 வினாடிகளில், 69 பில்லியன் யுவான் அளவிற்கு வர்த்தகம் செய்து இருந்தது. இதுவே நடப்பாண்டில் 84 பில்லியன் யுவான் அளவிற்கு, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 85,000 கோடி அளவிற்கு வர்த்தகம் செய்துள்ளது. இது 22% வளர்ச்சியாகும்.
இன்று நடந்த வர்த்தகத்தில் முதல் ஒன்பது மணி நேரத்தில் 1,60,000 கோடி அளவிற்கு வர்த்தகம் செய்து சாதனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு 126.72 பில்லியனாக இருந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 25% வளர்ச்சியப் பெற்றுள்ளது.
சீனாவின் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ஆம் தேதியை ”சிங்கிள்ஸ் டே”வாக பின்பற்றி வருகிறது. இதை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று கடந்த பத்தாண்டுகளாக அலிபாபாவின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான டேனியல் சாங்க் இந்த முறையை அறிமுகப்படுத்தினார்.
சிங்கிள்ஸ் டே திட்டத்தின் மூலம் வர்த்தகத்தில் தொடர்ந்து முன்னேறி இன்று உலகின் முன்னணி ஆன் லைன் வர்த்தக நிறுவனம் என்ற பெயரை அலிபாபா தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த சிங்கிள்ஸ் டே ‘டபுள் லெவன்” என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் 11ஆம் தேதி, 11வது மாதமான அக்டோபர் மாதத்தில் இந்த சிறப்புச் சலுகை கொடுக்கப்படுவதால், அவ்வாறு அழைக்கப்படுகிறது.
கடந்தாண்டு சிங்கிள்ஸ் டே வர்த்தகத்தில் அலிபாபா 30 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்து இருந்தது. இதுவே அமெரிக்காவில் ‘சைபர் மண்டே‘ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் வெறும் 7.9 பில்லியன் டாலர் அளவிற்கு மட்டுமே விற்பனை நடந்துள்ளது.
முதன் முறையாக அலிபாபா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் ஜாக் மா இல்லாமல், இந்த ஆன் லைன் வர்த்தகம் நடந்துள்ளது. (கடந்த செப்டம்பர் மாதம் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஜாக் மா ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
இந்த மாதத்தில் மட்டும் ஹாங்காங் சந்தையில் இருந்து 15 பில்லியன் டாலர் அளவிற்கு பங்குகளை விற்று திரட்ட அலிபாபா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுவும் இந்த நிறுவனத்துக்கு தற்போது இருக்கும் அடுத்த சவாலாகும்.