தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் சிலவற்றில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக பல இடங்களில் மழை பெய்துவருகிறது. இந்த மழை மேலும்2 தினங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, ஆகிய கடலோர மாவட்டங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை ஏதுமில்லை. நாளை முதல் சில தினங்களுக்கு மழைப் பொழிவு குறைவாக இருக்கும். அதன் பின்னர் 28, 29 ஆகிய தேதிகளில் மழை வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும்.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தூத்துக்குடியில் 7 செ.மீ, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 6 செமீ, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ, சென்னை விமான நிலையம், திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம், தரமணி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.