சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் (டிச.,16) நிறைவடைந்த நிலையில், மொத்தம் 2.98 லட்சம் வேட்பு மனுக்கள் பெறப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், டிச.,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த டிச.,09 முதல் 16 வரை பெறப்பட்டது. கடைசி நாளான நேற்று ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களின் மீதான பரிசீலனை நடந்து வரும் நிலையில், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் குறித்து விவரத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்: 2,06,657
கிராம ஊராட்சி தலைவர்: 54,747
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்: 32,939
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்: 3,992
மொத்த வேட்பு மனுக்கள்: 2,98,335

வேட்பாளர், வேட்புமனு தாக்கலின் போது தாக்கல் செய்த உறுதிமொழி ஆவணம் மாநில தேர்தல் ஆணைய இணையதளமான www.tnsec.tn.nic.in ல் வெளியிடப்பட்டுள்ளது.