சென்னை : குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்த விவகாரத்தில் 99 தேர்வாளர்களை தகுதிநீக்கம் செய்வதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து டிஎன்பிஎஸ்சி விசாரணையை தீவிரப்படுத்தியது. இதில் குறிப்பிட்ட 2 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. முறைகேடு செய்து, கூடுதல் மதிப்பெண் பெற்றதாக 99 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முறைகேட்டில் ஈடுபட்டவர்களில் 39 பேர் 100 இடங்களுக்குள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தேர்வில் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதிநீக்கம் செய்வதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தரவரிசைப்பட்டியலில் வந்துள்ள 39 பேருக்கு பதிலாக, தகுதியான வேறு 39 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய இரு மையங்கள் தவிர மற்ற எந்த மையத்திலும் முறைகேடு நடக்கவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான தேர்வாளர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. முறைகேடு செய்த 99 தேர்வாளர்கள், இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.