புதுச்சேரியில் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை எலிப்பூச்சியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். அதிக விலைக்குப் போகும் இதை, தனது குடும்பத்துடன் சமைத்துச் சாப்பிட்டதாக மீனவர் கலைஞானம் குறிப்பிட்டார்.
புதுச்சேரி மூர்த்தி புது குப்பத்தைச் சேர்ந்தவர் மீனவர் கலைஞானம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 3 மீனவர்களுடன் நேற்று இரவு மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றார். மீன்பிடித்து இன்று கரை திரும்பி வந்து மீன்களை வலையிலிருந்து எடுத்தபோது நண்டு போல காட்சியளிக்கும் அரியவகை எலிப்பூச்சி இருப்பதைக் கண்டார். கையில் பிடிபடாமல் ஓடி மணல் ஓட்டையில் புகும் வகையில் வழக்கமான எலிப்பூச்சி 10 முதல் 50 கிராம் எடை மட்டுமே இருக்கும்.
ஆனால், கலைஞானம் வலையில் சிக்கிய எலிப்பூச்சியின் எடை ஒரு கிலோ. மிகப்பெரிய அளவில் இருந்த இது போன்ற அரிய வகை எலிப்பூச்சி மீனவர் வலையில் கிடைப்பது அரிதான விஷயம். மருத்துவ குணம் கொண்ட இந்த எலிப்பூச்சி வகை ஐந்து ஆயிரம் ரூபாய் வரை ஏலம் போகக்கூடியது. இருப்பினும் இதன் மருத்துவ குணத்தைக் கருதி கலைஞானம் தனது குடும்பத்தாருடன் சமைத்துச் சாப்பிட்டதாகக் குறிப்பிட்டார்.