நெல்லை: கோவில்பட்டி கிளைச் சிறையில், மரணமடைந்த, சாத்தான்குளத்தைச் சேர்ந்த, தந்தை, மகன் ஆகிய இருவரது உடல்களுக்கும் 3 மணி நேரத்திற்கும் மேலாக பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) என்பவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர் சாத்தான்குளத்தில் ஏபிஜே மொபைல்ஸ் என்ற பெயரில் ஒரு செல்போன் கடையை நடத்திவந்தார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும், பென்னிக்சுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும், போலீசார் கைது செய்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில், அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தலைவர்கள் கண்டனம்

இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வணிகர்கள் ஒன்றிணைந்து, கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

ஹைகோர்ட் மதுரை கிளை

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தந்தை, மகன் இருவரின் உடலையும் 3 மருத்துவர்களைக் கொண்ட குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. மேலும், லாக்டவுன், மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று ஹைகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தியது.

உறவினர்கள் போராட்டம்

மேலும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், போலீசார் அடித்து கொன்றதாக ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்து உயிரிழந்த இருவரின் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.

மாஜிஸ்திரேட் வருகை

இதையடுத்து, பிரேத பரிசோதனை மையத்திற்கு கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் வந்து பார்வையிட்டார். பிறகு, மருத்துவ கல்லூரி முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

3 மணி நேரத்திற்கும் மேலே நடந்த பிரேதப் பரிசோதனை

இதையடுத்து, புதன்கிழமை, இரவு 8.10 மணிக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், பிரேதப்பரிசோதனை தொடங்கியது. இரவு 11.35 மணியளவில் முடிவடைந்தது. இதனிடையே, உடற்கூராய்வு முடியும் முன்பே, தந்தை, மகன் உயிரிழந்தது, உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத்திணறலால் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தது எப்படி என்று, திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சடலங்களை வாங்க மறுப்பு

இதனிடையே, பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, தந்தை, மகன் இருவர் உடல்களையும் வாங்க அவர்கள் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துவிட்டனர். உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்ய குடும்பத்தார் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை பிணவறையில், தந்தை, மகன் சடலம் வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை நடைபெற்றபோது, வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா, அரசியல் கட்சியினர் மருத்துவமனைக்கு வெளியே, குழுமியிருந்தனர். அவர்களும், இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.