ஐபிஎல் அணிகள், எப்படி தங்கள் அணி தொடர்பான பணிகளைச் செய்வது என்பது குறித்து பிசிசிஐ விதிகளை வகுத்துத் தர வேண்டியிருக்கும்.

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி, நேற்று, இந்த ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பைத் தொடர் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அக்டோபர் 18 ஆம் தேதி முதல், நவம்பர் 15 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. டி20 உலகக் கோப்பைத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, ஐபிஎல் தொடரை நடத்த மும்முரமாக திட்டம் போட்டு வருகிறது. செப்டம்பர் – நவம்பர் மாதத்திலேயே ஐபிஎல் தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடர் நடத்துவது குறித்து இன்னும் ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ ஐபிஎல் நிர்வாகம் சந்திக்க உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் நிர்வாக கவுன்சில் தலைவர் பிரிஜேஷ் படேல், “இன்னும் ஒரு சில நாட்களில் நாங்கள் சந்தித்து தொடரின் அட்டவணை குறித்தான இறுதி முடிவை எடுக்க உள்ளோம். இப்போது இருக்கும் சூழலில் முழு ஐபிஎல் தொடரையும் நடத்த திட்டமிட்டு வருகிறோம். ஐக்கிய அரபு அமீரகமான UAE நாட்டில் தொடர் முழுவதையும் நடத்தவே அதிக வாய்ப்புள்ளது” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.

ஐசிசி-யின், டி20 உலகக் கோப்பைத் தொடர்பான முடிவு வெளியாகும் முன்னரே, பிசிசிஐ தரப்பு, ஐபிஎல் தொடரை நடத்த முனைப்புக் காட்டி வந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், பல வீரர்கள் சில மாதங்களாக எந்தவிதப் பயிற்சியுமின்றி இருக்கிறார்கள். தொடருக்கு முன்னர் அவர்கள் பயிற்சி எடுக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது.

இது பற்றி ஐபிஎல் அணியின் உரிமையாளர் ஒருவர், “எங்கள் வீரர்களுக்கு குறைந்தபட்சம் 3 முதல் 4 வாரங்களுக்குப் பயிற்சி தேவை. பிசிசிஐ, தொடருக்கான அட்டவணையை வெளியிட்டப் பின்னர், நாங்கள் இதற்கான திட்டமிடலில் இறங்குவோம். எப்படியும் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடைபெறும் என்று தெரிகிறது. நாங்களும் அதற்குத் தயாராகவே உள்ளோம்” என்று தகவல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் நடந்து முடிந்த பின்னர், டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதனால் டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பெறும் செத்தேஷ்வர் புஜாரா போன்றவர்களுக்கும் பயிற்சி தேவைப்படும். அவர்களுக்கும் மைதானங்கள் வசதி செய்து தர பிசிசிஐ தரப்பு திட்டமிட்டு வருகிறது.

இந்த முறை ஐபிஎல் தொடருக்கான வர்ணனை வீட்டிலிருந்தபடியே செய்யப்படும் என சொல்லப்படுகிறது. வர்ணனையாளர்கள் வீட்டிலிருந்படியே ஆட்டங்களைப் பார்த்து கமென்ட்ரி செய்யும் வகையிலான சூழல் ஏற்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக, உலகளவில் நிதிச் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் ஐபிஎல் அமைப்பு, எப்படி ஸ்பான்சர்களைப் பிடிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்திற்கு முன்னர் எழும் கேள்விகள்:

1.ஒரே நாளில் நிறைய இரு போட்டிகள் நடத்தப்படுமா என்பதில் தெளிவில்லை.

2.ஐபிஎல் அணிகள், எப்படி தங்கள் அணி தொடர்பான பணிகளைச் செய்வது என்பது குறித்து பிசிசிஐ விதிகளை வகுத்துத் தர வேண்டியிருக்கும்.

3.இந்த முறை ரசிகர்கள் இல்லாமல்தான் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணி நிர்வாகங்களுக்கு பலத்த நிதியிழப்பு ஏற்படும். இதை சரிகட்ட பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா என்பதில் தெளிவில்லை.

4.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் விர்ச்சுவல் கமென்ட்ரி இருக்குமா என்பதிலும் முறையான தகவல் இல்லை.