சென்னை: தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவை வழிகாட்டுதல்படி மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வு நடக்கும். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள், அனைத்து வகை கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எனவே, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்க வேண்டிய கல்லூரிகளுக்கான செமஸ்டர், ஆண்டுத் தேர்வுகள் நடக்கவில்லை.

இதையடுத்து ஜூலை மாதம் தேர்வுகளை நடத்தலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை தெரிவித்து, அதற்கான நாட்காட்டியையும் வெளியிட்டு இருந்தன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் அடங்காத காரணத்தால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு ஜூலை இறுதி வரை அமலில் உள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், ஜூலை மாதத்திலும் தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுபோன்ற நெருக்கடி காரணமாக இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்ததால், அதை ரத்து செய்ய முடியாது. தேர்வு நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகமும் அறிவித்துவிட்டன.

இதையடுத்து, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர மற்ற ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு தற்போது உள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அந்த குழு தன்னுடைய பரிந்துரையில் தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி, பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி), அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கி கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்படும்.

இதன்படி,
* கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப்படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
* முதுநிலை பட்டப் படிப்பில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு இல்லை.
* இன்ஜினியரிங், பட்டப் படிப்பில் முதல், இரண்டாம், மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து.
* எம்இ பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடக்காது.
* எம்சிஏ,  முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த மாணவர்கள் இந்த பருவத்துக்கு மட்டும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் பட்டம் படிக்கின்றவர்களுக்கு மட்டும் தேர்வு ரத்து என்று அறிவித்து விட்டதால், மருத்துவ கல்லூரியில் முதல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

* மதிப்பெண் கணக்கீடு எப்படி?
முதல்வர் அறிவிப்பில் யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் படி மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று விளக்கவில்லை. குறிப்பாக அகமதிப்பீட்டில் இருந்து மதிப்பெண்கள் எடுக்கப்படுமா அல்லது கடந்த தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்களை எடுப்பார்களா என்றும் தெளிவுபடுத்தவில்லை. இதற்கான விளக்கம், அரசாணை வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்.

* அரியர்ஸ் தேர்வின் நிலை என்ன?
மத்திய அரசு இறுதியாண்டுக்கு விலக்கு இல்லை என்று தெரிவித்துவிட்டதால் இறுதியாண்டு மாணவர்களுக்கு இந்த அறிவிப்பில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. அதனால் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு  நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.  ஆனால், இறுதியாண்டுக்கான தேர்வு எப்போது நடக்கும், ஆன்லைன் முறையில் நடக்குமா, நேரடித் தேர்வாக நடக்குமா என்பது குறித்து நேற்றைய அறிவிப்பில் தெளிவுபடுத்தவில்லை. மேலும், முதல்வர் அறிவிப்பின்படி முதல், இரண்டு ஆண்டுகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், அந்த ஆண்டுகளுக்கான பாடங்களில் அரியர்ஸ் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தால் அந்த தேர்வுகளின் நிலை என்ன என்றும் அறிவிப்பில் இடம் பெறவில்லை. அரியர்ஸ் தேர்வுகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.