மக்களின் கருத்தைக் கேட்காமலேயே இனி திட்டப் பணிகளை தொடங்கலாம்
* 8 வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் தடையின்றி நிறைவேறும் அபாயம்
* அரசியல் கட்சி தலைவர்கள், சுற்றுச்சூழல்   ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: மத்திய அரசு வௌியிட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையால், தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. இதில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டு இருக்கின்றன. இது அமலுக்கு வந்தால், இனிமேல் மக்களின் கருத்துகளை கேட்காமல், எந்த திட்டத்தையும் தடையின்றி நிறைவேற்றலாம். இதனால், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் போன்ற திட்டங்கள் எதிர்ப்புகளை மீறி நிறைவேற்றும் நிலைமை உருவாகி இருக்கிறது. இந்த வரைவு அறிவிக்கைக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கில் தொழில்கள் முடக்கம், பொருளாதார மந்தநிலை, வேலையிழப்பு என அடுத்தடுத்த பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்க, இத்தனைக்கும் நடுவில் ஓசைப்படாமல் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, மக்களிடம் உரிய அனுமதி கேட்காமல் 191 திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டியது. இதில், செயல்படுத்தப்பட்ட சில திட்டங்கள் சுற்றுச்சூழல் மற்றும் வனங்களின் பாதுகாப்புக்கு எதிராக அமைந்தவை. இது போன்றுதான், ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு 2020’ என்ற வரைவு அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நாட்டில் பல்வேறு சட்டங்கள் உள்ளன நீர் பாதுகாப்பு சட்டம் 1974ல் கொண்டு வரப்பட்டது. பின்னர், காற்று மாசு சட்டம் 1981ல் கொண்டு வரப்பட்டது. ஆனால், 1984ம் ஆண்டு போபால் விஷவாயு கசிவுக்கு பிறகுதான். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு 1986ம் ஆண்டு அமல்படுத்தியது. கடந்த 1986ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் முதன் முதலாக 1994ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி, ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்டம் 1994’ கொண்டு வரப்பட்டது. பின்னர், 2006ம் ஆண்டு இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தற்போது அது நடைமுறையில் உள்ளது. இதன்படி, நாட்டில் எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும், அந்த திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

உதாரணமாக, தொழிற்சாலை தொடங்க விரும்பும் நிறுவனம், அதற்கு தேவையான இடம், அதில் இருந்து வெளியாகும் கழிவு, கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதனை அரசு சார்பில் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்யும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்று உறுதி செய்தால்தான் அனுமதி வழங்கப்படும். இந்த நடைமுறையால், தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதற்கு முன்பு அதனால் ஏற்படும் சாதக, பாதகமான விஷயங்கள் பற்றி மக்களுக்கும், அரசுக்கும் ஒரு தெளிவான விளக்கம் கிடைத்து விடும். எனவே, மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க எளிதாக இருக்கும். சுற்றுச்சூழல் முன் அனுமதியை பெறுவது கட்டாயம் என்பதையும் இச்சட்டம் உறுதி செய்கிறது.

இந்நிலையில், இந்த 2006ம் ஆண்டைய இந்த சட்டத்தில் மத்திய அரசு சமீபத்தில் மேலும் சில திருத்தங்களை செய்து, ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்டம் 2020’ என்ற வரைவு அறிவிக்கையை கடந்த 12ம் தேதி வெளியிட்டது. இதில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், ஏற்கனவே இச்சட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை நீர்த்துப்போக செய்து விட்டன. இச்சட்டம் வலுவாக இருக்கும் போதே சில தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன. மரங்கள், காடுகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்று இல்லை. ஆறுகள் மாசுப்பட்டுள்ளன.

புதிய வரைவு அறிவிக்கையில் உள்ள திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப்பாதைக்கு நாட்டை இட்டுச்செல்லும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். ‘சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்றாலும், தொழிற்சாலை அல்லது திட்டங்களை துவங்கிய பிறகு அனுமதி பெற்றுக் கொள்ள இச்சட்ட வரைவு அறிவிக்கை வழி வகுப்பதால், இதன் நோக்கமே கேள்விக்குறியதாகி விடுகிறது. இந்த திருத்த அறிவிக்கை, ஏற்கனவே உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் என கூறப்பட்ட போதும், உண்மையில் எந்த சிக்கல்களுக்கும் தீர்வாக அமையவில்லை. மாறாக, மக்கள் நலனுக்கு எதிராகவும், தொழிற்சாலைகளுக்கு சாதகமாகவும் இந்த திருத்தம் உள்ளது,’ என சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு 2020’ல் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
1 சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையை முன்வைக்காமல், மக்களிடம் கருத்துக் கேட்காமல் நடைமுறையில் உள்ள புதிய திட்டங்கள் மற்றும் பழைய திட்டங்களின் விரிவாக்கம், கட்டுமானங்களை தடையின்றி மேற்கொள்ள முடியும்.
2எழுபது 70 மீட்டர் வரை சாலையை அகலப்படுத்துவது, நீர் ஆதார கட்டமைபபுகள், நீர்வழி போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்துதல், அகலப்படுத்துதல் திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
3   ஆறுகள், காடுகள் வழியாக சாலை அமைத்தாலும் ஒப்புதல் தேவையில்லை. 1,50,000 சதுர மீட்டர் பரப்புக்கு உட்பட்ட கட்டுமான திட்டங்களுக்கும் ஒப்புதல் பெற வேண்டியதில்லை.
4 இதுபோன்ற பல்வேறு பணிகளுக்கு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையோ, வனத்துறை அமைச்சக முன் அனுமதியோ தேவையில்லை.
5  முக்கியத்துவம் வாய்ந்த தொழில் திட்டங்கள், பாதுகாப்பு துறை திட்டங்கள் என மத்திய அரசு வகைப்படுத்தும் திட்டங்கள் எதற்கும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிப்பதும், மக்களிடம் கருத்துக் கேட்தும் கட்டாயம் கிடையாது.
6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தோல் தொழில் மற்றும் கடலோர தொழில் மண்டலங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் கட்டுமான திட்டங்கள், விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல்அனுமதி தேவையில்லை.
7  புதிய திட்டங்களில் ஏதேனும் விதி மீறல் இருந்தால் மக்கள் அல்லது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. அரசிடமும் முறையிட முடியாது. அரசு அதிகாரிகளும், திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களும் மட்டுமே இதை தெரிவிக்க முடியும். மத்திய அரசு விசாரணை குழு அமைத்தால் மட்டுமே மக்கள் தங்கள் கருத்துகளை கூற முடியும்.
8 அதோடு, புதிய திட்டங்கள் குறித்து மக்கள் கருத்துக் கேட்பதற்கான கால அவகாசம் 30 நாளில் இருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.-  இந்த திருத்தத்தால், தமிழகத்துக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகளும், ஆபத்துகளும் ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. காரணம், மக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டுள்ள சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், கர்நாடகாவின் மேகதாது அணை திட்டம், கேரளாவின் முல்லைப் பெரியாறு புதிய அணை திட்டம், தேனி நியூட்ரினோ ஆய்வு திட்டம் போன்றவை சுற்றுச்சூழல் அனுமதி இன்றி நிறைவேற்ற முடியும். எனவே, இந்த திருத்தத்துக்கு தமிழகத்தை சேர்ந்த திமுக உள்ளிட்ட கட்சிகளும், பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்பு
* முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட, கேரளாவுக்கு எளிதாக அனுமதி கிடைத்து விடும்.
* காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை.
* தேனி நியூட்ரினோ ஆய்வகப் பணியை இனி கேட்பாரின்றி, இஷ்டம் போல் நிறைவேற்றலாம்.
* சேலம் – சென்னை இடையிலான 8 வழிச்சாலைகளை அமல்படுத்தலாம்.
* காவிரிப் படுகை பகுதிகளில் அமல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.

* குழப்பம் செய்த மத்திய அமைச்சர்
இந்த வரைவு அறிவிக்கை பற்றி மக்களிடம் கருத்து கேட்க மத்திய அரசு கடந்த மார்ச் 23ம் தேதி முடிவு செய்தது. ஆனால், பலருக்கு இப்படி ஒரு வரைவு அறிவிக்கை வெளியிட்டதே தெரியவில்லை. கொரோனா பரவல் காரணமாக அரசிதழிலேயே 19 நாள் தாமதமாக கடந்த ஏப்ரல் 11ம் தேதிதான் இது வெளியிடப்பட்டது. இதன் மீது மக்கள் கருத்துக் கூறுவதற்கான அவகாசம் ஜூன் 10ம் தேதியோடு முடிந்து விட்டது. பின்னர், ஆகஸ்ட் 10ம் தேதி வரை நீட்டித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. ஆனால், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த தேதியை ஜூன் 30ம் தேதி என மாற்றி குழப்பத்தை ஏற்படுத்தினார். பிறகு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மனுக்களை விசாரித்த பிறகு, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆகஸ்ட் 11 வரை கருத்து கேட்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

* எந்த திட்டங்களுக்கு பொருந்தும்
நிலக்கரி சுரங்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டங்கள், அனல் மின் நிலையம், அணுமின் திட்டம், நீர் மின் திட்டங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற தொழிற்சாலை திட்டங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த புதிய திருத்த அறிவிக்கை பொருந்தும். சுற்றுச்சூழலையும், மக்கள் வாழ்வியலையும் பாதிக்காது என்ற உறுதி இருந்தால் மட்டுமே, இத்திட்டங்களுக்கு தற்போதுள்ள 2006ம் ஆண்டு சட்டத்தின்படி அனுமதி கிடைக்கும். இல்லாவிட்டால், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மாற்று இடம் அல்லது வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படும். ஆனால், புதிய திருத்தத்தில் இந்த பணிகளை எந்த தடையுமின்றி செய்யலாம்.

* கருத்து தெரிவிப்பது எப்படி?
பொதுமக்கள், மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இந்த வரைவு சட்டம் குறித்து தங்கள் கருத்துக்களை அனுப்பலாம். கருத்துக்கள் மற்றும் மறுப்புகளை eia2020-moefcc@gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை கருத்து தெரிவிக்க அவகாசம் உள்ளது.

* எதிர்கால தலைமுறைக்கு சுத்தமான காற்றும் மிஞ்சாது
தற்போது செய்யப்பட்டுள்ள சட்ட திருத்தம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தவும், இயற்கை வளங்கள் சுரண்டப்படவும் தாராளமாக வழி வகுக்கிறது. இதனால், நாளைய தலைமுறைக்கு சுவாசிக்க சுத்தமான காற்று இருக்காது. தற்போது, மாஸ்குடன் சுற்றுவது போல, ஆக்சிஜன் சிலிண்டருடன் அலைய வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகி விடும் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

* மாநில மொழிகளில் வருமா?
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிராக கர்நாடகா, டெல்லி நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேற்கண்ட வரைவு சட்டம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த மாநில மொழிகளில் இதை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று, பிராந்திய மொழிகளில் இந்த வரைவு சட்டத்தை மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இன்னும் அதை மத்திய அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.