இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் அரைசதம் அடித்து வெற்றி தேடித்தந்த இந்திய வீரர் தீபக் சாஹர், பயிற்சியாளர் டிராவிட் தனது பேட்டிங் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.

கொழும்பு,

கொழும்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த இலங்கைக்கு எதிரான பரபரப்பான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இலங்கை நிர்ணயித்த 276 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுக்கு 193 ரன்களுடன் பரிதவித்தது. இந்த சிக்கலான சூழலில் கைகோர்த்த தீபக் சாஹரும், புவனேஷ்வர்குமாரும் இலங்கை பந்து வீச்சை திறம்பட சமாளித்து ரன் சேகரித்ததுடன் 49.1 ஓவர்களில் இலக்கை எட்ட வைத்து ஆச்சரியப்படுத்தினர். தீபக் சாஹர் 69 ரன்களுடனும் (82 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), புவனேஷ்வர்குமார் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி தொடர்ச்சியாக 9-வது முறையாக கைப்பற்றி இருக்கிறது. அத்துடன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 93-வது வெற்றியாக இது அமைந்தது. குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் குவித்த அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. இதற்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவும், இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானும் தலா 92 வெற்றி பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த 28 வயதான தீபக் சாஹர் கூறுகையில், ‘ஏறக்குறைய இது போன்ற ஒரு இன்னிங்சை விளையாட வேண்டும் என்பது எனது சிறு வயது கனவாகும். தேசத்துக்கு இதைவிட சிறந்த வழியில் வெற்றி தேடித்தர முடியாது. களம் இறங்குவதற்கு முன்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்னிடம், எல்லா பந்துகளையும் விளையாடும்படி கூறினார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய ‘ஏ’ அணிக்காக சில ஆட்டங்களில் பேட்டிங் செய்து இருக்கிறேன். என் திறமை மீது அவருக்கு நம்பிக்கை உண்டு. பேட்டிங்கில் 7-வது வரிசையில் நன்றாக ஆடக்கூடிய அளவுக்கு இருப்பேன் (ஆனால் 8-வது வரிசையில் தான் ஆடினார்) என்று என்னிடம் கூறினார். வருகிற ஆட்டங்களில் நான் பேட்டிங் செய்ய அவசியம் வராது என்று நம்புகிறேன்.

இந்த ஆட்டத்தை பொறுத்தவரை தொடக்கத்தில் ஒவ்வொரு பந்துகளாக கவனம் செலுத்தி விளையாடினேன். ரன் தேவை 50-க்கு கீழ் வந்ததும், நம்மால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. அதன் பிறகு ‘ரிஸ்க்’ எடுத்து சில ஷாட்டுகளை ஆடினேன்’ என்றார்.

டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நமது வீரர்களின் சிறந்த வெற்றி இது. கடினமான கட்டத்தில் இருந்து அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பியது வியப்புக்குரிய முயற்சி. ஆட்டத்தை பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் (53 ரன்) பேட்டிங் அருமை’ என்று பாராட்டியுள்ளார்.

இந்தியா-இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.